தமிழ்நாட்டில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக வருகின்றனர் – ஜே.பி.நட்டா
குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநிலப் பிரிவினைவாதம் பேசும் தி.மு.க-வை புறக்கணிக்க வேண்டும் என ஜே.பி.நட்டா பேச்சு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப அரசியல் இருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக வருகின்றனர். அந்தந்த மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பா.ஜ.க போராடி வருகிறது. குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநிலப் பிரிவினைவாதம் பேசும் தி.மு.க-வை புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நீட் தேர்வால் கிராம மக்கள் எளிதில் மருத்துவப் படிப்பை பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கை பற்றி எதுவும் தெரியாமல் பேசுகின்றனர். இதில் மருத்துவப் படிப்பைக்கூட தமிழில் படிக்கலாம். பா.ஜ.க கொள்கை அடிப்படையிலான கட்சி, அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சியாக இருக்கிறது. மற்றக் கட்சிகள் சுருங்கி மாநில கட்சிகளாக மாறிவிட்டன என தெரிவித்துள்ளார்.