அக்.4ம் தேதி இவர்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி – அமைச்சர் அறிவிப்பு
வருகிற 25-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் 30ம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த வாரம் 25-ம் தேதி 50,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 91 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனிடையே பேசிய அமைச்சர், தமிழகத்தில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 முதல் 4 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை மருந்து தட்டுப்பாடு இல்லை, தேவையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளது என தெரிவித்த அமைச்சர், முதல்வரின் அறிவுறுத்தலின்படி 2 மாதங்களுக்குள் புதிதாக 4,308 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.