கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளையா.? பொன் ராதாகிருஷ்னன் உடன் விவாதிக்க தயார்.! தமிழக அமைச்சர் சவால்.!
கன்னியாகுமரியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயார் என தமிழக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பதில் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பெயர் சரித்திரத்தில் நிலைத்து இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தமிழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் மனோஜ் தங்கராஜ், ‘ கன்னியாகுமரியில் கடந்த அதிமுக – பாஜக ஆட்சியில் 39 குவாரிகள் இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை 6ஆக குறைந்துள்ளளது. சட்டவிரோதமாக யாருக்கும் குவாரி அனுமதி கொடுக்கவில்லை.
அண்மையில் குலசேகரம் அருகே, ஒரு கல் குவாரியில் கற்கள் உடைக்கப்பட்டு அவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாநிலம் விட்டு மாநிலம் இடையே கனிம வளங்களை கொண்டு செல்ல ஒப்பந்தத்தை மத்திய அரசு தான் போட்டுள்ளது. அதில் மாநில அரசு தலையிட முடியாது.
கனிம வளங்கள் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கள் பொய்யானவை. இந்த கனிம வளங்கள் பற்றி பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் போன் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் விவாதிக்க நான் தயார்.’ என சவால் விட்டுள்ளார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ்.