பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை.! 2 பேர் கைது.! மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு.!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒரு கிராமத்தில் பள்ளி மாணவர்களிடம் தீண்டாமை கடைபிடித்த விவகாரத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு, தின்பண்டங்கள் விற்பனைக்கு தரமறுத்த கடை உரிமையாளர் விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
அதுவும், அந்த குழந்தைகளிடம், இது ஊர்க்கட்டுப்பாடு, உங்களுக்கு தர மாட்டேன். உங்கள் பெற்றோர்களிடம் சென்று கூறுங்கள் என கூறியதும், ஏமாற்றத்துடன் அந்த குழந்தைகள் திரும்பி சென்ற அந்த வீடியோ வெகு வைரலாக இணையத்தில் பரவியது.
பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை கடைபிடித்த விவகாரம் தொடர்பாக கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமசந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட இருவரும் கரிவலம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணையில் இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த முருகன், குமார், சுதா ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம், பாஞ்சாக்குளத்தில் இரு பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் வட்டாச்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.