நாற்பதும் நமதே! நாடும் நமதே! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Default Image

கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மத்திய அரசு அமைந்தாக வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

திமுக தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் உளமார்ந்த நன்றி மடல். தலைவர் கலைஞர் இருந்திருந்தால், எப்படி ஒரு முப்பெரும் விழா நடத்தப்பட்டதோ, அதற்கு எள்ளளவும் குறையாத வகையில், விருதுநகரில் செப்15-ல் நடைபெற்ற முப்பெரும் விழா இருந்தது. முப்பெரும் விழாவில் வெள்ளமாய் திரண்டு வந்த உடன்பிறப்புகளுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவிக்கிறேன்.

முப்பெரும் விழாவில் உங்கள் முகம் கண்டு மனம் மகிழ்ந்தது. வெற்றிக் களம் காண வியத்தகு முரசொலித்த முப்பெரும் விழா. தமிழ்நாட்டை பகுத்தறிவு-சுயமரியாதை-சமூகநீதி ஆகிய இலட்சிய உளிகள் கொண்டு எழுச்சி நிறைந்திடச் செதுக்கிய நமது முப்பெரும் தலைவர்களான பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோரை மகத்தான மலையில் செதுக்கி வைத்தது போன்ற மனங்கவரும் தோற்றத்தைக் கொண்ட முகப்பின் முன்நின்று ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டு சிந்தை மகிழ்ந்தனர். விடியல் அரசின் வெற்றிச் செய்தியை இடி முழக்கமென உரக்கச் சொல்லும் விழாவிற்காக விடிய விடியத் தொண்டர்கள் அணி அணியாய் வந்தபடியே இருந்தனர்.

செப்டம்பர் 15 அன்று காலையில், மதுரை பள்ளியில் மாணவ சமுதாயத்திற்கான காலைச் சிற்றுண்டி எனும் செறிவான திட்டத்தைத் தொடங்கி வைத்து, நம்முடைய அரசு இந்தியத் துணைக் கண்டத்திற்கே முன்மாதிரியான முற்போக்கு அரசு என்பதை மீண்டும் மெய்ப்பித்திடும் வாய்ப்பினைப் பெற்று, மனநிறைவுடன் விருதுநகர் நோக்கிப் புறப்பட்டேன். வழியெங்கும் கழகத்தின் இருவண்ணக் கொடிகள் காற்றில் அழகுற அசைந்து, “வா உடன்பிறப்பே” என்று வாஞ்சையுடன் வரவேற்பினை வாரி வழங்கின. “எங்களைப் பார்” என்பதுபோல இருபுறமும் பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் திரண்டிருந்தனர். அன்புக் கரம் நீட்டி, ஆனந்தக் குரல் எழுப்பினர்.

முப்பெரும் விழா என்றாலே நம் நினைவுக்கு வருவது, முரசொலியில் முத்தமிழறிஞர் எழுதும் உடன்பிறப்பு கடிதங்கள்தான். 4041 கடிதங்களை 21,510 பக்கங்களில் 54 தொகுதிகளாக சீதை பதிப்பகம் கௌரா ராஜசேகர் தொகுத்திட, அந்த வரலாற்று ஆவணத்தை விழா மேடையில் வெளியிட்டு பெருமை கொண்டேன். ‘திராவிட மாடல்’ என்பதற்கான இலக்கணம் குறித்து எளிய முறையில் நான் ஆற்றிய உரைகளில் இருந்து சிறிய சிறிய அளவிலான கருத்துகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட சிறிய நூல். கழகத்தின் இளையதலைமுறை எளிதில் படித்தறியக் கூடிய வகையில் டைரி போன்ற வடிவமைப்பில் திராவிட மாடல் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

தொண்டர்களின் நலன் போற்றிக் காத்து, இயக்கத்தின் வலிமையை என்றும் பெருக்கி நாம் சந்திக்க வேண்டிய களங்கள் நிறைய இருக்கின்றன. மாநில உரிமைகளைக் காப்பதற்கும் நம் மக்களுக்கான திட்டங்களைத் தடையின்றி நடத்துவதற்கும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மத்திய அரசு அமைந்தாக வேண்டும். அதற்கான களமாக நாடாளுமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது. அந்தக் களத்திற்கு நாம் இப்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும். விருதுநகர் முப்பெரும் விழா அதற்கான பாசறைப் பயிற்சிக் களமாக அமைந்திருக்கிறது.

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் இரட்டை ஆட்சி முறைக்கு முடிவு கட்டிட, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிட, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றிட, நாடு முழுவதுற்கும் ‘திராவிட மாடல்’ தேவைப்படுகிறது. அதற்கான முழக்கமாகத்தான் ‘நாற்பதும் நமதே-நாடும் நமதே’ என்று அந்த மேடையில் உங்களின் குரலாக நான் முழங்கினேன்.  உடன்பிறப்புகளாம் உங்களின் மீதுள்ள முழு நம்பிக்கையினால் இந்த முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறேன். தொடர் வெற்றிகளைக் காண்பதற்கு, விருதுநகர் ஒரு நல்ல தொடக்கம். அது வெற்றிக் களத்திற்கான முரசொலி, களம் காண்போம், வெற்றிகளைக் குவிப்போம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
elon musk alien
Tamilnadu CM MK Stalin - PMK Leader Anbumani Ramadoss
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match