உங்கள் டென்னிஸை நாங்கள் காதலித்தோம்:பெடரர் ஓய்வுக்கு சச்சின் புகழாரம் !
நேற்று டென்னிஸ் விளையாட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்த ரோஜர் பெடரருக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 41 வயதான ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் தனது மகத்தான பங்களிப்பை அளித்து வந்தார். பெடரர் 24 ஆண்டுகளில் 1500 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன்படி 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பெடரர், அடுத்த வாரம் நடைபெறும் லேவர் கோப்பை, தான் பங்கேற்கும் கடைசி போட்டியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் தனக்கு நிறைய சவால்களை அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார். எனது உடலின் திறன்கள் மற்றும் வரம்புகள் பற்றி நான் அறிவேன், மேலும் தற்போது எனது போட்டியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் வந்து விட்டதாகவும் பெடரர் கூறினார். இது குறித்து உலகப்பிரபலங்கள் பலரும் பெடரருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கரும், ரோஜர் பெடரருக்கு வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார். சச்சின் கூறியதாவது, “உங்கள் டென்னிஸை நாங்கள் காதலித்தோம். உங்களது டென்னிஸ் மெல்ல மெல்ல எங்களுக்கு பழக்கமாகிவிட்டது. மேலும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் விலகாது, அவை நம்மில் ஒரு பகுதியாக மாறும். அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி’ என்றும் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
What a career, @rogerfederer. We fell in love with your brand of tennis. Slowly, your tennis became a habit. And habits never retire, they become a part of us.
Thank you for all the wonderful memories. pic.twitter.com/FFEFWGLxKR
— Sachin Tendulkar (@sachin_rt) September 15, 2022