‘இந்த உதவிக்கான்டி ரொம்ப நன்றி சாமி’ – நரிக்குறவ மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்திய முதல்வர்…!
விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நரிக்குறவ மக்கள்.
நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் இனத்தை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நரிக்குறவ மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததற்கு விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.