இவர்களுக்கு உடனுக்குடன் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை தேவை – பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.
நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
அதன்படி, நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படுகிறது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்திற்கு கிடைக்கும். மத்திய அரசின் இந்த முடிவை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அடித்தட்டு மக்களின் எழுச்சிக்காக திமுக நடத்தி வந்த போராட்டத்திற்கு வெற்றி என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தவகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் ஆகிய சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக நீதியை முழுமையாக உறுதி செய்ய, அவர்களுக்கு உடனுக்குடன் சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
1. நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் ஆகிய சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!#STStatusForNarikuravas
— Dr S RAMADOSS (@drramadoss) September 15, 2022