பார்வைக் குறைபாட்டை நீங்களே கண்டறியக் கூடிய கருவி ..!
கண்பார்வைக் குறைபாட்டைக் கண்டறிய நவீன முறையிலான சோதனைக் கருவிகள் உள்ளன. இக்கருவிகளின் வழியாக இக்குறைபாட்டை கண்டறிய அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
கண் மருத்துவ நிபுணர், வீரேந்திரநாத் பெசாலா ஹைதாராபத்தில் உள்ள எல்.வி.பிரசாத் கண் மருத்துவ நிறுவனத்தில் (LVPEI) பணியாற்றுகிறார். இவருடைய முயற்சியின் விளைவாக மிகக் குறைந்த செலவில், கண்பார்வைக் குறைபாட்டை மிகத் துல்லியமாகக் கண்டறியக் கூடிய கருவி நமக்குக் கிடைத்துள்ளது.
The Folding Phoropter
மடங்கும் பார்வைக் குறைபாடு அறியும் கருவி – The Folding Phoropter– என இக்கருவிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. காகித அட்டைகளால் தயாரிக்கப்பட்டுள்ள இதனுடைய விலை 60 ரூபாய் மட்டுமே. இக்கருவியின் மூலம் ஒருவர் தாமாகவே சோதித்துத் தன்னுடைய பார்வைக் குறைபாட்டை அறிந்து கொள்ள இயலும்.
தேவைப்படுவோர், கொரியர் மற்றும் அஞ்சல் வழியாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைத் தாள் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இதனை எவ்வாறு மடக்கி நீள் சதுர வடிவ சோதனைக் கருவியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
வாங்குவோர், இக்குறிப்புகளைப் பயன்படுத்தி மிக எளிதாக இதனை மடக்கி அதனைக் கருவியாக மாற்றிக் கொள்ளலாம். இக்கருவி வழியாகப் பார்த்து பார்வைக் குறைபாட்டைச் சோதித்து அறிவதற்காக எழுத்துக்கள் அடங்கிய அட்டை ஒன்றும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பா்வைக் குறைபாட்டைக் கண்டறிவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் இதுதான் மிகவும் விலை குறைவானது மட்டுமின்றி அனைவரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய கருவியாகவும் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
“உலகில் 285 மில்லியன் மக்கள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 சதவிகித மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒளிச்சிதறல் பார்வைக் குறைபாட்டை சரிவர கவனிக்காததால் பாதிப்படைந்தவர்கள். ஒளிச்சிதறல் குறைபாட்டை சரி செய்யாத காரணத்தால் பார்வை இழப்பைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 3% மட்டுமே. ஆனால் இந்தியாவில் ஒளிச்சிதறல் குறைபாட்டைக் சரிசெய்யாததன் ( uncorrected refractive error (UREs) ) காரணமாகப் பார்வை இழப்பவர்களின் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உள்ளது. இந்த நோயைக் கண்டறிந்து உடனடியாகக் குணப்படுத்தாவிட்டால் தனிநபர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பெரும் பாதிப்பாக அமையும்.
ஒளிச்சிதறல் பார்வைக் குறைபாட்டை கண்டறிவதற்காக தற்போதைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள கருவிகள் அனைத்தும் மிகவும் தொழில்நுட்பம் வாய்த்தவையாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ள நிலையில் இது போன்றதொரு கருவியை மிகவும் குறைந்த விலையில் தயாரிப்பது மிகவும் சவாலான செயலாகத்தான் இருந்தது” என்கிறார் விபின் தாஸ்.
ஆய்வுக்குழுவின் ஒரு பிரிவினர், இக்கருவியின் துல்லியத் தன்மையைச் சோதித்தறிவதில் ஆர்வம் காட்டினர். அதே சமயத்தில் பொதுமக்கள் தாங்களே இந்தக் கருவியைப் பயன்படுத்தி பார்வைக் குறைபாட்டைச் சோதிக்கும் வகையில் எளிமையாகவும் விலை குறைவாகவும் இருப்பதற்கான ஆய்வுகளை மற்றொரு பிரிவினர் மேற்கொண்டனர்.
மனு பிரகாஷ் என்பவர் காகிதத்தைப் பயன்படுத்தி வடிவமைத்திருந்த நுண்னோக்கியை முன்மாதிரியாகக் கொண்டு இந்தக் கருவியைத் தயாரிக்கத் திட்டமிட்டோம். கருவியின் விலை குறைவுக்கு இதுதான் மிக முக்கியக் காரணமாகும். காகிதத்தைப் பயன்படுத்திக் கருவியைத் தயாரித்தாலும், குறைபாட்டைக் கண்டறிவதில் துல்லியத் தன்மையை நிலை நிறுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தினோம்.
பேப்பரைப் பயன்படுத்துவது சவாலான விசயமாக இருந்தாலும், எளிதாக மடக்குவதற்கும் துளையிடுவதற்கும் இதுதான் மிகப் பொருத்தமானது என்பதைப் பின்னர் கண்டறிந்தோம். பேப்பரைப் பயன்படுத்துவதால் அதனுடைய உறுதித் தன்மையை நிலைநிறுத்துவது கடினமான சவாலாக இருந்தது. அதனைப் போன்றே இதனை வாங்குவோர் அதனை எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைப்பதும் சலாலான காரியமாக இருந்தது” என இந்தக் கருவியை உருவாக்குவதற்காகத் தாங்கள் தாண்டி வந்த தடைகளையும் அதனை உடைத்தெறிந்த முறைகளையும் விளக்குகிறார் தாஸ்.