11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்..!
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. மேலும், கடற்கரை – வேளச்சேரி வரை உள்ள 18 ரயில் நிலையங்களும் பராமரிப்பே இல்லாமல் பாழடைந்த பங்களா போல் காட்சி அளிப்பது பற்றி பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். 1985ம் ஆண்டு “சென்னை பறக்கும் ரயில் திட்டம்” (Chennai Mass Rapid Transit System, MRTS) அமைக்க திட்டமிடப்பட்டு, 1991ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து கோட்டை, பூங்காநகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ேகாட்டூர்புரம், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி வரை 20 கி.மீ. தூரம் ரயில் பாதை அமைக்கும் பணிகள் 1997ம் ஆண்டு முடிவடைந்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பறக்கும் ரயில் திட்டம் முதல் கட்டமாக கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை இயக்கப்பட்டது. பின்னர் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. வேளச்சேரி வரை பறக்கும் ரயில் திட்டம் நீட்டிக்கப்பட்டதால், பயணிகளிடம் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து தற்போது 9 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து, கடற்கரை – வேளச்சேரி வரை இயக்கப்பட்ட பறக்கும் ரயிலை, பரங்கிமலை வரை 3 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, வேளச்சேரி அடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், பரங்கிமலை ஆகிய இடங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 2007ம் ஆண்டு பணிகளும் தொடங்கியது. பணிகள் தொடங்கி, தற்போது 11 ஆண்டுகள் ஆகி விட்டது.
ஆனாலும், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இன்னும் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படவில்லை. வேளச்சேரி – புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. ஆனால் ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கப்படாமல் 11 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சிலர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதால் பணிகள் நடைபெறவில்லை. அப்பகுதி மக்கள் கேட்கும் நஷ்டஈட்டை வழங்கி, விரைவில் வேளச்சேரி – பரங்கிமலை வரை ரயில் சேவையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டித்தால், பரங்கிமலை பகுதி மிகப்பெரிய ரயில்வே ஜங்ஷனாக மாறும். காரணம், கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் பரங்கிமலை வழியாகத்தான் செல்கிறது. அதேபோன்று, சென்னை மெட்ரோ ரயில் சேவையும் பரங்கிமலை வரை இயக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பறக்கும் ரயில் சேவைையையும் கடற்கரையில் இருந்து வேளச்சேரி அடுத்து பரங்கிமலை வரை நீட்டிக்கப்படும்போது, அனைத்து வகை ரயில் பயணிகளும் பரங்கிமலை பகுதியை ஜங்ஷனாக ஏற்றுக்கொள்வார்கள். சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பரங்கிமலையில் இறங்கி, சென்னை நகர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிக்கு மாற்று ரயிலில் எளிதாக செல்ல முடியும். இவ்வளவு முக்கியத்துவம் பெறும் பறக்கும் ரயில் திட்டத்தை 11 ஆண்டுகளாக தெற்கு ரயில்வே கிடப்பில் போட்டுள்ளது பொதுமக்களிடம் சந்தேகம் ஏற்படுத்தி வருகிறது.
அதே போன்று வேளச்சேரி, பெருங்குடி, தரமணி ஆகிய ரயில் நிலைய வளாகத்தை சுற்றி புதர்கள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. அதை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால், சமூகவிரோதிகள் அந்த பகுதிகளை ஆக்கிரமித்து, இரவு நேரங்களில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. அதனால் ரயில் நிலையம் மற்றும் வளாகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில், சென்னை பறக்கும் ரயில் திட்டம் (எம்ஆர்டிஎஸ்) என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அது முற்றிலும் செயலிழந்த நிலையில் உள்ளது.
அதனால், பறக்கும் ரயிலுக்கு பொதுமக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பை பயன்படுத்தி, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா, லிப்ட், எஸ்கலேட்டர் வசதி, பாதுகாப்பு, சுத்தம் உள்ளிட்ட பயணிகள் வசதிகள் அனைத்தையும் கடைபிடித்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும். ரயில்வே உயர் அதிகாரிகளும் அவ்வப்போது, இந்த ரயில் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேளச்சேரி – பரங்கிமலை இடையே 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் பணிகளை விரைந்து முடித்து ரயில் இயக்க வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.
இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதியில்லை
வேளச்சேரி ரயில் நிலையத்தில் தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். வேளச்சேரி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மேற்கூரை வசதி செய்து தரப்படவில்லை. ஆனால், 12 மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணமாக இருசக்கர வாகனத்துக்கு 10 வசூலிக்கப்படுகிறது. மேற்கூரை வசதியுடன்தான் பார்க்கிங் வசதி செய்துதர வேண்டும் என்று டெண்டர் விதியில் கூறப்பட்டுள்ளது. இப்படி எந்த விதிகளும் கடைபிடிக்கப்படுவதில்லை.
அலங்கோல ரயில் நிலையங்கள்
பறக்கும் ரயில் செல்லும் கடற்கரை – வேளச்சேரி இடையே தற்போது 18 ரயில் நிலையங்கள் உள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால், எந்த ரயில் நிலையமும் பயணிகள் வந்து செல்வதற்கு ஏற்றவாறு சுகாதாரமாக இல்லை. அனைத்து ரயில் நிலையங்களும் அலங்கோலமாகவே காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு ரயில் நிலையமும், வணிக வளாகத்துடன் அமையும் வகையில் கட்டுமான வசதியுடன் வடிவமைக்கப்பட்டு, பிரமாண்டமாக கட்டப்பட்டது. ஒரு ரயில் நிலையத்தில் கூட கண்காணிப்பு கேமராக (சிசிடிவி) கிடையாது. எஸ்கலேட்டர், லிப்ட் ஆகியவை துருப்பிடித்து பழைய இரும்பாக காட்சி அளிக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
திருவல்லிக்கேணி, தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையத்திற்குள் பயணிகள் குறிப்பாக பெண்கள் செல்லவே பயப்படும் நிலை உள்ளது. ரயில் வந்து செல்லும் பிளாட்பாரம் பகுதியில் மட்டும் கடமைக்கு ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டுள்ளார். மற்றபடி ரயில் நிலையத்தின் இரண்டு மாடி கட்டிடங்கள் பாதாள அறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் சமூக விரோதிகள் அந்த பகுதியில் இருந்து சீட்டு விளையாடுவது, தண்ணி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நிலையும் உள்ளது.