மதச்சார்பற்ற அணிகள் இணைய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்: மு.க.ஸ்டாலின்..
புதுச்சேரியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. எனவே, தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதேநேரத்தில், மதச்சார்பற்ற அணியாக காங்கிரஸ் கட்சியும், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஒருங்கிணைந்து இருப்பது வரவேற்கத்தக்கது. மதச்சார்பற்ற அணிகள் இணைய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அது நிறைவேற்றப்பட்டு இருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது. தி.மு.க. சார்பில் அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கும், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதே கருத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.