ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
‘நாங்கள் ஏன் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய கூடாது?’ என அறிக்கை கேட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் அண்மை காலமாக அதிக தற்கொலைகள் நடந்து வருகின்றன. அதில் பெரும்பாலும் சிக்குவது படித்த இளைஞர்கள் தான். மேலும் அதிகாரத்தில் இருக்கும் காவலர்கள் கூட இதற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.
ஆதலால், தமிழக அரசு இதற்கு தடை போட்டு ஓர் சட்டத்தை இயற்றியது. ஆனால், அதில் சரியான நெறிமுறைகள் இல்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தது. இதே போல ஆன்லைன் விளையாட்டு தடை தொடர்பாக கர்நாடகாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, ‘ நாங்கள் ஏன் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய கூடாது?’ என அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து அதனை 4 வார காலத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஆன்லைன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதே போல ஆன்லைன் நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் 2 வார காலத்திற்குள் தமிழக அரசும் தடை செய்வதற்கான காரணத்தை விளக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை 10 வாரத்திற்கு பிறகு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.