திமுக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை – எஸ்.பி.வேலுமணி
இப்போது இருக்கின்ற திமுக அரசு ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என எஸ்.பி.வேலுமணி பேட்டி.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நீண்ட நாட்களாக தீர்க்காமல் இருக்கும் பத்து முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் மனு அளிக்கலாம் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதன்படி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஆட்சியரிடம் மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்ட 500 சாலைகளை இந்த அரசு ரத்து செய்தது. அந்த சாலைகள் போடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அனைத்து பணிகளும் வேகமாக முடிக்க வேண்டும். இப்போது இருக்கின்ற திமுக அரசு ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வெள்ளலூர் பேருந்து நிலையம் ஐம்பது சதவீதம் கட்டிய நிலையில் உள்ளாக்கத்தோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அவசியமான திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்து திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தனது கோரிக்கை என்று அவர் கூறியுள்ளார்.