உடல் உறுப்புகளை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ட்ரோன் அறிமுகம்..!
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும் ட்ரோன்கள் அறிமுகம்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்ரோன் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பல வசதிகளை பயன்படுத்தியதால் தான் தமிழ்நாடு மருத்துவத் துறையில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. உடல் உறுப்புகளை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம்.
பேரிடர் காலத்தில் இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறைந்திருந்தது. இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழ்நாட்டில், முதலமைச்சரின் காப்பீட்டுத்
திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. MGM மருத்துவமனையில் மட்டும் 1,000 பேர் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. தொடர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.