இந்திய வெண்மை புரட்சியின் தந்தை.. கிராமங்களின் ஹீரோ.. வர்கீஸ் குரியன்.!
வர்கீஸ் குரியன், இவர் பெயர் சொன்னதும் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அமுல் (Amul) எனும் இந்த பெயரை கூறினால் தெரிந்துவிடும். இவர்தான் இந்திய வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர். கிராம புறங்களில் ஹீரோ என பாராட்டப்படுபவர்.
ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த கேரளாவின் கோழிகோட்டில் பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையிலும் பட்டம் பெற்றார்.
அதன் பின் அரசு செலவில், ஒரு நிபந்தனையோடு , அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்றார். அதாவது, இந்திய அரசு சொல்லும் இடத்தில 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
அதன் படி, குஜராத்தின் ஆனந்த் எனும் இடத்தில உள்ள அரசு பாலேடு ஆய்வு நிறுவனத்தில் பணியமர்த்தபட்டார் வர்கீஸ். அப்போது, அவரின் நண்பர் மூலம் பால் கூட்டுறவு சங்கத்தை பார்க்க சென்றார்.
அப்பொழுது தான் பால் விவசாயிகள் படும் கஷ்டத்தை நேரில் கண்டார். பாலை வைத்து வேறு என்ன பொருட்கள் உருவாக்க முடியும்? அதனை எப்படி சந்தை படுத்த முடியும்? வெகுஜன மக்களிடம் எப்படி அதனை கொண்டு சேர்க்க முடியும்? பெரிய நிறுவனங்களை எப்படி கவனிக்க வைக்க முடியும் ? அது வர்கீஸின் சவாலாக வந்து நின்றது.
எருமை பாலை பெரிய நிறுவனங்கள் அந்த சமயம் ஒதுக்கியே வைத்து இருந்தனர். இந்த கேள்விகளை சரி செய்ய, தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே வர்கீசின் முதல் வேலையாக இருந்தது.
ஆனந்த் பால் கூட்டுறவு நிறுவனம் சுருக்கமாக அமுல் (Amul) பெரும்பாலான தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு சொல்லித்தந்தார். மாடுகளை செயற்கை கருத்தரித்தலுக்கு உட்படுத்துதல் வரையில் விவசாயிகளுக்கு சொல்லிகொடுத்தார்.
பால் மட்டும் விற்றால் சரிப்பட்டு வராது என உணர்ந்த வர்கீஸ், அதன் மூலம் புதிய பால் பொருட்களை உற்பத்தி செய்து காட்டினார். எருமைப்பாலை வைத்து பால் பவுடடரை தயாரித்து காண்பித்தார். இவையெல்லாம் தயாரித்தால் மட்டும் போதாது, அவற்றை விளம்பரப்படுத்தலும் அவசியம் என உணர்ந்து அந்த விதையை விவசாயிகளுக்கும் மனதில் பதிய வைத்தார்.
பன்னாட்டு நிறுவனங்கள் நிராகரித்த ஏழைகளின் பால் கூட்டுறவு சங்கத்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் வெற்றி நிறைந்த பிராண்ட் ஆக உயர்த்தியது.
மேலும் அமுலின் வெற்றியை கண்டு வியந்த இந்திய அரசு இந்தியா முழுக்க விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்து கிராமப்புற பால் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை ஆபரேசன் ஃப்ளட் (Operation Flood) என பெயரிடப்பட்டு மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டம் தான் வெண்மை புரட்சி என அழைக்கப்படுகிறது.
‘ஏழை எளிய மக்களின் கனவுகளை தாங்கி நிற்கிறோம் என்பதே நிறைவு தருகிறது. எனக்கு பால் பிடிக்காது; ஆனால் மக்கள் பால்காரன் என என்னை அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். ‘என வர்கீஸ் குரியன் ஒருமுறை கூறியுள்ளார்.
தன் வாழ்க்கை வரலாற்றில் குறிக்கிற அவருக்கு உலக உணவு பரிசு, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என உயரிய விருதுகள் அளித்து வர்கீஸ் குரியன் அவர்களை இந்திய அரசு கௌரவித்துள்ளது.