#BREAKING: மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவு.

கடந்த தமிழக சட்டப்பேரவையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி உறுதிப்பட தெரிவித்திருந்தார்.

இதன்பின் உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்குத் தகுதியான மாணவிகளிடருந்து சான்றிதழ்களை பெற அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பட்டயம் மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளில் சேரும் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்ட உதவி நிதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மேலும், மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்கவும் முடிவு செய்துள்ளது.

TNGOVT

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment