#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாக தனி நீதிபதி அறிவிப்பு!
அதிமுக பொதுக்குழு வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவிப்பு.
அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் கடிதத்தை திரும்ப பெற்றதாக உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுக்குழு வழக்கை மீண்டும் தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன் என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா, இல்லையா என தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இருந்து மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பு இரண்டு முறை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. இதற்கு தனி நீதிபதி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இருப்பினும், வேறு அமர்வுக்கு மாற்றும் முடிவில் இருந்து ஓபிஎஸ் தரப்பு பின்வாங்கவில்லை. ஆனால், வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முறையிட்டது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது. இதனை மனுவாக தாக்கல் செய்ய மறுப்பும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதி விசாரிக்கக் கோரி கடிதம் அளித்து, திரும்பப் பெற்றிருந்தது ஓபிஎஸ் தரப்பு. கடிதத்தை திரும்பப்பெற்றதாக மனுதாக்கல் செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு வழங்கியது. இதன்பின் அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாகவும், வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனவும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியுள்ளார்.
இதனிடையே, தன்னை விமர்சித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக ஓபிஎஸ் புகார் தெரிவித்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்கனவே தலைமை நீதிபதி ஏற்க மறுத்த நிலையில், தற்போது வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.