மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம்! 7 புதிய மாவட்டங்கள் – முதல்வர் அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் தகவல்.
மேற்கு வங்க மாநிலத்தில் புதன்கிழமை அன்று அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மேலும், மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
அதன்படி, பெர்ஹாம்பூர், கண்டி, சுந்தர்பான்ஸ், பஷிர்ஹாட், இச்சாமதி, ரனாகாட் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்கள் புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் 23 மாவட்டங்கள் உள்ள நிலையில், அவை 30 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட உள்ளன. நிர்வாக செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.