திமுக அரசுக்கு மாட்டிறைச்சி மட்டும் துவர்ப்பாக இருப்பதேன்? – சீமான்

Default Image

கோயிலுக்கருகே மாட்டிறைச்சி உணவுக்கடை வைக்கக்கூடாதென யார் சொன்னது? என சீமான் அறிக்கை. 

சேலம் தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சீமான் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், சேலம் தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த தம்பி பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக அப்பகுதியில் நடத்தி வரப்பட்ட மாட்டிறைச்சி உணவுக்கடையை, இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, திடீரென மூட உத்தரவிட்டிருக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரச்செயல்பாடு வெட்கக்கேடானது.

கோயிலைக் காரணமாகக் காட்டி, சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதெனக்கூறி, மாட்டிறைச்சி கடையை மூடியதை நியாயப்படுத்த முனையும் மாவட்ட நிர்வாகம், கோழி, ஆடு இறைச்சிகளைக் கொண்ட உணவுக்கடைகளுக்கு மட்டும் அப்பகுதியில் அனுமதி வழங்கியதேன்? மாட்டிறைச்சி உணவுக்கு மட்டும் எதற்கு இந்தத் தீண்டாமைக்கோட்பாடு?

கோயிலுக்கருகே மாட்டிறைச்சி உணவுக்கடை வைக்கக்கூடாதென யார் சொன்னது? ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே’ எனப்பாடி, ‘மாட்டிறைச்சி உண்டாலென்ன? அவர் கொண்டிருக்கிற அன்பினால் சிவபெருமானால் ஏற்கப்படுவார்’ என சைவ சமயக்குரவர் அப்பரே உரைக்கிறபோது இவர்களுக்கென்ன சிக்கல்?

பட்டினப்பிரவேசமும், பசு மடமும்கூட ஏற்பாக இருக்கும் திமுக அரசுக்கு மாட்டிறைச்சி உணவு மட்டும் உவர்ப்பாக இருப்பதேன்? அங்கு மாட்டிறைச்சி உணவுக்கடை இருந்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனம் புண்படுமெனும் மழுப்பல் வாதம் எதற்கு?

மாட்டிறைச்சி உணவின் பெயரால் பாஜக அரசும், அதன் ஆட்சியாளர்களும், செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடல் அரசா? இல்லை! ஆரிய மாடல் அரசா? என்பதை தமிழக அரசு தெளிவுப்படுத்த முன்வர வேண்டும்.

ஆகவே, சேலத்தில் மூடப்பட்ட மாட்டிறைச்சி உணவுக்கடையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டுமெனும், உணவுரிமையில் தலையிடும் பிற்போக்குத்தனத்தை இனியும் செய்யக்கூடாதெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.’  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்