பரந்தூர் விமான நிலையம் மூலம் 2ம் தொழிற்புரட்சி – அமைச்சர் தங்கம் தென்னரசு
புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தகவல்.
சென்னையின் 2 வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தற்போது 4,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது என்றும் விமான நிலையம் அமைக்க இன்னும் 1,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். பரந்தூரில் விமான நிலையம் அமைவதன் மூலம் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் வசதிகளும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
இதனிடையே, பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் மற்றொரு மைல் கல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தபின் புதிய விமான நிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும் என்றும் தற்போதைய உத்தேச திட்டமதிப்பு ரூ.20,000 கோடி எனவும் முதலமைச்சர் கூறியிருந்தார்.