#JustNow: அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவை இன்று முதல் தொடக்கம்!
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கொரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களில் பார்சல் சேவையும் ஒன்றாக இணைந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருச்சி, மதுரை, கோவை, ஓசூர், குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கியுள்ளது. இந்த குறிப்பிட்ட இடங்களில் இருந்து வரும் பார்சலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தினசரி மற்றும் மாத வாடகை மூலமாக பார்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல சென்னையில் இருந்து இந்த 7 நகரங்களுக்கும் பார்சல் அனுப்ப முன்பதிவு செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.