இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் பூரண நலம் பெற்றார் – கேரள சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் பூரண நலம் பெற்று விட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை நோய் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், 35 வயதான அந்த நபர் தற்போது குரங்கம்மை நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அந்த நபருக்கு தேசிய வைராலஜி நிறுவனத்தின் (என்ஐவி) அறிவுறுத்தல்களின்படி 72 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து மாதிரிகளும் இரண்டு முறை எதிர்மறையாக இருந்தன. நோயாளி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். மேலும், அவரோடு தொடர்பில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் எதிர்மறை என்று தான் முடிவுகள் வந்ததாக வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.