#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – இந்தியாவுக்கு முதல் வெற்றி!
முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரகுமானை வீழ்த்தி இந்திய அணி வீரர் ரவுனக் சத்வானி வெற்றி.
சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் 3 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவில் 188 அணிகள், பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்றுள்ளனர். முதல் போட்டியில் இந்திய 1 (ஏ) அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இந்தியா சார்பில் தலா 3 அணிகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர் ரவுனக் சத்வானி முதல் சுற்றில் வெற்றிக்கு பெற்றுள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்திய பி அணியில் இடம்பெற்றுள்ள ரவுனக் சத்வானி, முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரகுமானை தோற்கடித்தார். இந்தியாவின் ரவுனக் சத்வானி வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி 36 நகர்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார். இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.