பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் பெண்களுக்கு என்ன நடக்கிறது? உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் உயரும் வகையில் நடத்தப்படுகின்றனரா? கிரண்பேடி
புதுச்செரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,பெண்களை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கான சமூக தீர்திருத்தம் தேவை என்று தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 முடிவுகள் கடந்த முன் தினம் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்து,பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் பெண்களுக்கு என்ன நடக்கிறது? உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் உயரும் வகையில் நடத்தப்படுகின்றனரா? பெற்றோரின் பழமைவாத நம்பிக்கையால் பலர் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர். தனிப்பட்ட முறையில் மாணவிகளிடம் பேசும்போது தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும், பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என தெரிவிக்குமாறும் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து பெற்றோர்களிடம் யார் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது இங்கு கேள்வியாக உள்ளது. இதனால் பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் அதிகம் சாதிக்கும் திறனைப் பார்க்கும்போது வருத்தத்தை அளிக்கிறது. எனவே பெண்களை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கான சமூக சீர்திருத்தம் தேவை. அதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் முக்கிய பங்காற்ற வேண்டும்.
புதுச்சேரியில் பெண்கள் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர். திறமையானவர்களாகவும், சம்பாதிப்பவர்களாகவும் இருந்தால் ஆண்களைச் சார்ந்து இருப்பது குறையும். ஆண்களில் சிலர் தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக்கூட செலுத்தாமல், தாங்கள் சம்பாதிப்பதை மது அருந்தவே செலவு செய்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் மதிய உணவுடன் இலவசக் கல்வி அளிக்கப்படவில்லை என்றால் பல பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழலுக்குச் சென்றிருப்பார்கள்.
தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாலோ, குடிபோதைக்கு அடிமையாகியிருந்தாலோ தனியார் பள்ளிகளில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்துவதில்லை என்று பல புகார்கள் ராஜ்நிவாஸிற்கு வருகின்றது. பெண் குழந்தைகள் தொடர்ந்து படிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பிளஸ் 2வுக்குப் பின்னர் பெண் குழந்தைகள் படிப்பைத் தொடர பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகம் கல்வி கற்று சம்பாதித்து சுயமாக நிற்க செய்வது அவசியம்.இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.