பா.ஜ.க.வினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா ? – கே.எஸ்.அழகிரி
ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பா.ஜ.க.வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என கே.எஸ்.அழகிரி ட்வீட்.
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில், பா.ஜ.க.வினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை ? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘சென்னை மால்லபுரத்தில் நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அவரது படம் இல்லாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த விளம்பரத்தில் தான் பா.ஜ.க.வினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை ? பா.ஜ.க.வினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா ?
ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பா.ஜ.க.வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகவே ஆத்திரம் கொண்ட தமிழர்கள் சிலர் பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது. இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல்துறையினர் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல்துறையினர் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
— K.S.ALAGIRI (@KS_Alagiri) July 28, 2022