ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருட்கள் மாயம் – அதிமுக நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார்..!
ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் புகார்.
வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகளால் அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு, அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரனிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் மீண்டும் திறக்கப்பட நிலையில் இபிஎஸ் தரப்பினர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது. அதன்படி, அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை காணவில்லை என தகவல் கூறப்படுகிறது.
மேலும், மூன்றாவது தளத்தில் இருந்த ஹார்டு டிஸ்க், செங்கோல் உள்ளிட்ட விலை உயர்ந்த மற்றும் முக்கியமான பொருட்களை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.