#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பான தந்தையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை தொடர்பாக தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவில் 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று தங்கள் மருத்துவரை சேர்க்கும் வரை மறுபிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மாணவியின் உடல் மறுகூராய்வு நடைபெற்று நிறைவு பெற்றது. மேலும், இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பான தந்தையின் மனு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் நியமித்துள்ள மருத்துவர்களை நீங்கள் எப்படி குறை கூற முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உயர்நீதிமன்றத்தில் முறையிட வேண்டியதுதானே என்றும் கூறியுள்ளனர். அரசு தரப்பு நியமித்த மருத்துவர்கள் குழுவில் நம்பிக்கை இல்லை என்றும் உரிய, நியாயமான விசாரணையை தமிழ்நாடு அரசு செய்யவில்லை எனவும் தந்தை தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.
மாணவியின் உடல் மறுகூராய்வு குறித்த தகவல் பெற்றோருக்கு உரிய நேரத்தில் தரப்பட்டது என்றும் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவித்தது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, கள்ளக்குறிச்சி மாணவியின் மறுபிரேத பரிசோதனையை தாங்கள் பரிந்துரைக்கும் மருத்துவர்களை கொண்டு செய்யக்கோரி தந்தை தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக தந்தைக்கு அறிவுறுத்தலும் வழங்கியதாக கூறப்படுகிறது.