மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக! – கே.பாலகிருஷ்ணன்

Default Image

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம். ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்றாலும், மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக முன்வந்து விட்டுத்தரலாம் என கூறியிருப்பது தேவையற்றது.

இது பொதுமக்கள் மத்தியில் மின்சார கட்டணத்திற்கான மானியம் தொடருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு அறிவித்துள்ள உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பும் மக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்.

மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு நடைபெறும் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை. இப்போதும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறை தொடரும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உபயோகிக்கும் மின்சார யூனிட் அளவு கூடுதலாகவே வரும்.

எனவே, அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென்றும், மாதமாதம் மின் கணக்கெடுப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்