மின் கட்டணம் உயர்வு.. தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் – விஜயகாந்த்
இந்த மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை.
கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்து, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், மின்கட்டணம் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருக்கிறார். தமிழகத்தை விட அண்டை மாநிலங்களில் மின் கட்டண உயர்வு அதிகமாக உள்ளதாக அவ்வப்போது அமைச்சர் கூறி வருகிறார்.
அண்டை மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பேசுவதற்கு பதிலாக, வாக்களித்த தமிழக மக்களுக்கு இந்த அரசு சிறந்த அரசாக இருக்க வேண்டும். பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக, தற்போது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்ற அரசாக மக்களை வாட்டி வதைக்கிறது. ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில், தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவது மேலும் துயரத்தில் ஆழ்த்துவதாகும்.
இந்த மின் கட்டணம் உயர்வு வீட்டு வாடகையை உயர்த்தவும் வழிவகுத்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் – டீசல், சமையல் கேஸ் விலை, சமையல் எண்ணெய் உள்பட உணவு தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது. மற்றொரு புறம் மின் கட்டணம் உயருகிறது. இதனால் சாமானிய மக்கள் மேலும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்களை பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சுமையை, மக்கள் நலன் கருதி மறுபரிசீலனை செய்து தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
சாமானிய மக்களை பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சுமையை , மக்கள் நலன் கருதி மறுபரிசீலனை செய்து தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.#மின்_கட்டணஉயர்வு | @CMOTamilnadu pic.twitter.com/Qwkh6T4ra8
— Vijayakant (@iVijayakant) July 19, 2022