நாமக்கல் அருகே கிரானைட் குவாரிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீருக்கும் வழியின்றி தவிப்பதாக பொதுமக்கள் புகார்!
கிரானைட் குவாரிகளால் நாமக்கல் அருகே 4 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீருக்கும் வழியின்றி தவிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த சுள்ளி பாளையம், சித்தம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிர்சாகுபடி செழிப்பாக நடைபெற்று வந்ததெல்லாம், 10 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சிதான். தற்போது கால்நடைகளுக்கு புல் கூட இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிரானைட் குவாரி அமைப்பவர்கள் நிலம் கேட்டபோது நல்ல விலை கிடைத்ததால் விற்றுவிட்ட கிராமத்தினர் தற்போது குடிநீரும் உப்பாகிப்போய் விட்டதாக கவலை தெரிவிக்கின்றனர்.
படிப்படியாக விரிவடைந்த கிரானைட் குவாரிகள் தற்போது வீட்டின் வாசல் வரை வந்து விட்டதால் அப்பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர். வீடுகளிலிருந்து சில அடி தூரத்தில் குவாரிகள் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிரானைட் குவாரிகளுக்கு வைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிகளால் ஏராளமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. வெடிமருந்தின் தாக்கத்தால் காற்றும் நிலத்தடி நீரும் மாசடைந்து சுகாதாரமற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
200 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி குவாரிகள் அமைத்துள்ளதை சுட்டிக்காட்டும் பொதுமக்கள் இதனை விரிவாக்கம் செய்ய அனுமதிப்பதால் 3 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் கிரானைட் குவாரிகள் அனுமதிக்கப்பட்ட விதத்தில் செயல்படுகின்றனவா என்பது குறித்து தணிக்கை செய்யவும், புதிய குவாரிகளுக்கு தடை விதிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.