#Breaking:”அதிமுகவில் பொ.செயலாளர் பதவி;எம்ஜிஆர்,ஜெ.வுக்கு இருந்த அதிகாரம் ஈபிஎஸ்-க்கு?” – நத்தம் விஸ்வநாதன் முக்கிய தகவல்!
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால்,இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில்,அடுத்த நிலையில் இருக்கும் பொருளாளருக்கு தான் சின்னமும்,கட்சியை வழி நடத்தும் அதிகாரமும் உள்ளது என்றும், பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும்,குறிப்பாக, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,பொதுக்குழு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் விஸ்வநாதன் அவர்கள் கூறுகையில்:”புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,புரட்சி தலைவி அம்மா காலத்தில் பொதுச்செயலாளர் பதவியில் என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ,அந்த அத்தனை அதிகாரங்களையும் உள்ளடக்கிய பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு,அந்த பதவியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதனிடையே,இந்த பொதுக்குழு செல்லாது என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.ஆனால்,அவரை சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவே இத்தகைய தவறான தகவல்களை அவர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.மாறாக,அதிமுக பொதுக்குழு சட்டப்படி,சட்டவிதிகளுக்குட்பட்டு நடைபெறும்,இதை யாராலும் தடுக்க முடியாது.மேலும்,பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செயல்பாட்டுக்கு வரும்.
அதே சமயம்,இரண்டு நாட்களுக்கு முன்பு,நான்தான் என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறேன் என்று அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தெரிவித்திருந்தார்.ஆனால்,அவரின் ஆதரவாளர் வைத்திலிங்கம் இரட்டை தலைமை சர்ச்சை காரணமாக ,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு செல்லாது என்று சொல்கிறார்.அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்பதை வைத்திலிங்கமும் ஒப்புக் கொள்கிறார்.ஆகவே,அவர்களுக்குள்ளாகவே ஒற்றைக் கருத்து இல்லை.
எனவே,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் இல்லை. இதனால், அவர்களால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிமுக தலைமை கழக நிர்வாகிகள்தான் கட்சியை வழிநடத்துகிறார்கள்.அவர்கள்தான் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்துகிறார்கள்.எனவே,இதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.அதன்படி,ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்.99% கழக நிர்வாகிகளும்,பொதுக்குழு உறுப்பினர்கள்,தொண்டர்களின் ஒற்றைத் தலைமை விருப்பத்தை நிறைவேற்ற பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்”,என்று தெரிவித்துள்ளார்.