ஆன்லைன் ரம்மிக்கு தடை – விரைவில் அவசரச்சட்டம்? – தமிழக அரசு அதிரடி!
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையின் விரைவில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம்.
ஆன்லைன் ரம்மியால் பலரும் பணத்தை இழந்தது மட்டுமல்லாமல்,விலை மதிப்பில்லாத உயிரையும் மாய்த்து கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு அவசர சட்டத்தை உருவாக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு சட்ட குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.இந்த குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார்,தமிழக அரசின் குழுவில் காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து,ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உரிய தரவுகளுடன் இந்த குழு ஆய்வு செய்யும் என்றும், சிறப்பு குழு இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரை அளிக்கவேண்டும் என்றும் இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்ட விரைவில் இயற்றப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார். மேலும்,புதிய சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் முன்மாதிரியாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்,ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழுவினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சற்று நேரத்திற்கு முன்னதாக சமர்ப்பித்துள்ளனர்.அதில்,ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் பணம் இழப்பு, தற்கொலை உள்ளிட்ட ஆபத்துக்கள் நிறைய இருப்பதாக கூறி இக்குழு உரிய தரவுகளுடன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.இதனால்,இக்குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில்,இன்று மாலை முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மிக்கு ஓரிரு நாட்களில் அவசர தடை சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கே.சந்துரு அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் வழங்கினார். pic.twitter.com/Ebcd9dZpyG
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 27, 2022