#Breaking:”தேர்தல் ஆணையத்தை இன்னும் நாடவில்லை?” – ஓபிஎஸ் தரப்பு திடீர் தகவல்!
அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது.இதனால்,ஓபிஎஸ் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்தை தாங்கள் இன்னும் நாடவில்லை என்றும்,நாடியதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் ஓபிஎஸ் தரப்பினரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும்,பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்வதான தீர்மானத்தை எப்படி கொண்டு வந்தார்கள் என்றும்,5 இல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரினால் பொதுக்குழுவை கூட்ட வேண்டியது கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்தான் என்றும்,அனைத்து பதவிகளும் ரத்து என்றால்,பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் ரத்து தானே? என்றும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு,வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே,5-இல் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் பொதுக்குழு நடத்தலாம் என்றும்,அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டியது கட்டாயம் எனவும்,மாறாக,கழக விதிகளில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரின் அனுமதி பெற்று பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய அவர்:”ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன.மேலும்,ஏற்கனவே,திருத்தப்பட்ட பதவிகளுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதியானது”, என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.