#Justnow:மாநிலக் கல்விக் கொள்கை – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில்,சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உத்தரவிட்டார்.
அதன்படி,தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும்.உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரும் இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும்.வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் சமத்துவமான கல்வி தரப்பட வேண்டும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக்கொள்கை அமைய வேண்டும் என இக்குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில் தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.