#BREAKING: போதைப்பொருள்; பிரபல நடிகையின் சகோதரர் கைது!
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது.
பெங்களுருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், பாலிவுட் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் நேற்று இரவு பெங்களூரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டார். ஹோட்டலில் நடந்த விருந்தில் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது.
ரகசிய தகவலின் பேரில், பெங்களூரு எம்ஜி சாலையில் உள்ள ஹோட்டலில் பார்ட்டியில் போலீசார் சோதனை நடத்தினர். போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 35 பேரின் மாதிரிகளை சேகரித்து போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த ஆறு பேரில் சித்தாந்த் கபூரின் மாதிரியும் இருந்தது.
இதனைத்தொடர்ந்து, சித்தாந்த் கபூர் உள்பட போதைப்பொருள் பயன்படுத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு விருந்துக்கு வந்தார்களா அல்லது ஹோட்டலில் உட்கொண்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். கைதான சித்தாந்த் கபூர் அல்சூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் சக்தி கபூரின் மகன், சித்தாந்த் கபூரும் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘பௌகால்’ என்ற வலைத் தொடரில் (WEB SERIES) சிந்து தேதா கதாபாத்திரத்தில் நடித்தவர். ‘ஷூட்அவுட் அட் வடலா’, ‘அக்லி, ‘ஹசீனா பார்க்கர்’, ‘செஹ்ரே’ போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘பாகம் பாக்’, ‘சுப் சுப் கே’ போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியற்றியுள்ளார்.
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சக்தி கபூரின் மகள் ஷ்ரத்தா கபூரும் ஒருவர். இருப்பினும், எதுவும் நிரூபிக்கப்படவில்லை. மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பிறகு வெளிவந்த போதைப்பொருள் வழக்கின் விசாரணையின் போது NCB கண்டுபிடித்த வாட்ஸ்அப் தகவலின் அடிப்படையில் 2020 செப்டம்பரில் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.