ஆளுநரின் கருத்து குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் இரண்டு மாதத்தில் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது ஆளுநரின் சனாதன தர்மம் தொடர்பான கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இது குறித்து பதிலளித்த நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் இரண்டு மாதத்தில் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசைன் தயாரானதும் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2% என்ற அளவில் இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.