மேகதாது அணை; உரிமைகளை காக்க உறுதியான நடவடிக்கை – அமைச்சர் துரைமுருகன்

Default Image

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு புதிய மனு.

மேகதாது அணை விவகாரத்தில் விவாசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து நான், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணைகட்டும் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினேன். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்ட அனுமதிக்கக்கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எனது தலைமையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து அளித்த போது, அவரும் தமிழ்நாட்டின் இசைவில்லாமல் எந்த அனுமதியும் மேகதாது திட்டத்திற்கு அளிக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.

இருப்பினும் கர்நாடக அரசு 2022-23 ஆம் ஆண்டின் அதன் நிதிநிலை அறிக்கையில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்காக ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என தெரிந்தவுடன், அதை எதிர்த்து தமிழக அரசு, சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேகதாது திட்ட அறிக்கை குறித்து, இப்பொருள் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதென தெரிவித்து. விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு உறுப்பினர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் பல கூட்டங்களில் வலியுறுத்தியதின் பேரில் இப்பொருள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இச்சூழலில் 17.06.2022 அன்று நடைபெற உள்ள 18ஆவது ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைத் திட்டம் பற்றிய பொருள் விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என அதன் கடிதத்தில் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் கடிதத்தில், மேகதாது அணைக் குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற கருத்து, உச்சநீதிமன்றம் அளித்த ஆணைக்கும், மத்திய அரசு, அதன் 01.06.2018 அன்று காவிரி ஆணையத்தின் செயல்கள் மற்றும் அதிகார வரம்புகள் பற்றிய அறிவிப்பிற்கும் முரண்பாடாக உள்ளது.  ஆணையத்தின் இக்கருத்து சரி இல்லை என்றும், இப்பொருளை விவாதப் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உறுப்பினர் 16ஆவது கூட்டத்தில் இப்பொருள் ஆணையத்தின் எல்லை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளதால் இது குறித்து விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசின் எதிர்ப்பு உறுதியுடன் தெரிவிக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கும். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அதன் வரம்பை மீறி மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசால் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு தொடர்ந்து காவிரி பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலன்களையும், உரிமையையும் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியுடன் எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் நம்பிக்கை அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்