அதிர்ச்சி…நேதாஜி படையில் இருந்த அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்த அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் 1943 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவப்படையில் (ஐ.என்.ஏ.) தன்னை இணைத்து கொண்டு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்.இந்நிலையில்,இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் வயது(102 ) மூப்பால் மலேசியாவில் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,ஆளுநர் ஆர்என்ரவி உள்ளிட்டோர்இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்,இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது அறிக்கையில் முதல்வர் கூறியிருப்பதாவது:
“1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் ‘இந்திய தேசிய இராணுவத்தில் (I.N.A) ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கையான அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் (102 வயது) நேற்று முன்தினம் மலேசியாவின் செந்துல் நகரில் காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவில் பிறக்காவிட்டாலும் வாழாவிட்டாலும் 21 வயதே ஆன நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் படையில் சேர்ந்து கடும் நெருக்கடி மிகுந்த சூழல்களில் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் அஞ்சலை பொன்னுசாமி அம்மாள்.இந்தியா,மலேசியா இரு நாடுகளும் முறையே 1947 மற்றும் 1957 ஆண்டுகளில் விடுதலை பெற்றதைக் கண்டு மகிழ்ந்து நிறைவாழ்வு வாழ்ந்து அவர் விடைபெற்றிருக்கிறார்.
வீரம், மனவுறுதி, துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண்குலத்துக்கே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கிய அஞ்சலை பொன்னுசாமி அம்மாளின் தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும்”,என்று தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/uFGgxqtta2
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 2, 2022