அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை.. 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்!
குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சக்கரபாணி தகவல்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உயிரிழந்த பிறகும் குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், இந்தக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் வழங்கல்துறையில், முதல்வர் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் ரூ.2,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 35.35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி தரப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இதனிடையே பேசிய அவர், ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ உளுந்தம்பருப்பும் கூடுதலாக தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதல்வர் தெரிவித்து இருந்தார். அதன்படி, ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும் என கூறினார். மேலும், நியாயவிலை கடைகளில் பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே, கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டார்.