திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு!
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன் மற்றும் அவரது தயார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் 31 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர். மறுபக்கம் ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பின. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்புவதாக கூறினார்.
அந்தவகையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த அன்றைய தினமே, சென்னை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை, பேரறிவாளன், அவரது தாயார் மற்றும் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்து நன்றியை தெரிவித்தனர். இதன்பின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரையும் சந்தித்து நன்றி கூறியிருந்தார்.
இந்த நிலையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை, பேரறிவாளன் மற்றும் அவரது தயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, இயக்குனர் மாரி செல்வராஜ் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், திராவிட முன்னேற்ற கழக அரசின் தொடர் முன்னெடுப்பால் 31 ஆண்டு சிறைவாசத்திலிருந்து முழுமையான விடுதலையை அடைந்துள்ள அண்ணன் பேரறிவாளன் அவர்கள் அற்புதம்மாள் அவர்களுடன், சேலம் படப்பிடிப்பில் இருந்த என்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இனி வரும் காலங்கள் மகிழ்ச்சியால் நிரம்ப வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
கழக அரசின் தொடர் முன்னெடுப்பால் 31 ஆண்டு சிறைவாசத்திலிருந்து முழுமையான விடுதலையை அடைந்துள்ள அண்ணன் பேரறிவாளன் அவர்கள் அற்புதம்மாள் அவர்களுடன், சேலம் படப்பிடிப்பில் இருந்த என்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இனி வரும் காலங்கள் மகிழ்ச்சியால் நிரம்ப வாழ்த்துகள். @mari_selvaraj pic.twitter.com/k2ApAz4gLl
— Udhay (@Udhaystalin) May 20, 2022