#BREAKING: மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு!

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு என தகவல்.

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இதனிடைய, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 3 இடங்களில் திமுக வேட்பாளர்களான சு.கல்யாணசுந்திரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

மறுபக்கம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். மாலை 5 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை இன்று அதிமுக தலைமை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. கோரிக்கை குறித்து கடிதம் தந்ததற்கு ஆதரவு உண்டு என அண்ணாமலை தெரிவித்ததாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தற்போது, மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment