பேரறிவாளன் விடுதலை – வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.
161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், சட்டப்பிரிவு 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம். உச்ச நீதிமாமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்து, பேரறிவாளன் விடுதலையை கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மறுபக்கம் ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் வாயில் வெள்ளை துணியை கட்டி, கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமுக்கம் மைதானம் நேரு சிலை முன்பாக வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.