திமுகவின் ஓராண்டு கால ஆட்சி;துயரமான ஆட்சி – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.அந்த வகையில்,மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
உழைப்பு தொடரும்:
இதனை முன்னிட்டு “இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக இருக்க விரும்புவதை விட,இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்பதே உண்மையான பெருமை தரக்கூடியது,எனவே அதற்கான எனது உழைப்பு தொடரும், இடர்பாடுகளை நீக்கி வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அம்மாவிடம் ஆசி:
மேலும்,திமுக ஆட்சியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு தாயார் தயாளு அம்மாவிடம் சற்று முன்னர் முதல்வர் ஆசி பெற்றார்.மேலும்,முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து,மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தவுள்ளார்.
புதிய அறிவிப்புகள்:
அதன்பின்னர்,இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,திமுக ஆட்சியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அன்னதானம்,கருத்தரங்குகள் நடைபெரவுள்ள நிலையில்,சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொண்டு முதல்வர் அவர்கள் திமுகவின் ஓராண்டு சாதனைகள் குறித்து பேசவுள்ளார்.
இதனிடையே,அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துயரமான ஆட்சி-ஓபிஎஸ் குற்றச்சாட்டு:
இந்நிலையில்,மக்களுக்கு பயன்தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சிதான்,திமுக அரசின் ஓராண்டு கால ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்,தேர்தலின் போது,திமுக கொடுத்த பொய்யான,சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி அவர்களுக்கு மக்கள் வாக்களித்ததன் விளைவாகவே தமிழகத்தில் திமுக ஆட்சி துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது எனவும்,இதனால்,மக்கள் தங்களது இன்பத்தை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர் எனவும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கல்விக்கடன் ரத்து:
மேலும்,தனது அறிக்கையில் அவர் கூறுகையில்:”தேர்தல் சமயத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற்கொண்டது.ஆனால்,தற்போது திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் ஆகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.அதைப்போல,30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில், அறிவிக்கப்பட்டது.ஆனால்,இது தொடர்பாகவும் திமுக அரசு வாய் திறக்கவில்லை.குறிப்பாக,மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாததால்,மகளிர் அதிருப்தியில் உள்ளனர்.இவ்வாறு,முக்கிய வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை.
எனவே,தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,தர்மம் மறுபடி வெல்லும் என்பதற்கேற்ப அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.