அரசு காவல்துறையை சீர்திருத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்
காவல்துறையை சீர்திருத்தும் விதத்திலான முயற்சிகளை அரசு திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும் என சிபிஎம் அறிவுறுத்தல்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் அடுத்த நாள். காவல் நிலையத்தில் உயிரிழந்தார்.
அவருடைய மரணத்திற்கு ‘வலிப்பு நோய்’ காரணம் என்று காவல்துறையினர் கூறிவந்த நிலையில். உடற்கூராய்வு அறிக்கையில் அதற்கு மாறான விபரங்கள் வந்துள்ளன. அதன்படி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. வலது முன்னங்காலில் எலும்பு முறிவு காணப்பட்டுள்ளது. அவருக்கு வலிப்பு நோயே இருந்ததில்லை என்பதை குடும்பத்தாரின் பேட்டிகளும், மருத்துவர்கள் அறிக்கையும் உறுதி செய்கின்றன.
இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே முன்னுக்கு பின் முரணான தகவல்களை காவல்துறை தெரிவித்து வந்துள்ளது. குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் வழங்கி அவர்களின் வாயடைக்க முயற்சி நடந்திருப்பதாகவும், உருட்டுக்கட்டையால் விக்னேஷ் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையாக இருக்கக் கூடும் என்பதையே தற்போது உணர முடிகிறது. மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் விதத்தில் காவலர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர். சட்டமன்றத்தில் பேசியபோது தற்போது கிடைத்துள்ள விக்னேஷின் உடற்கூராய்வு முடிவுகளின்படி அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணையை தொடந்து நடத்திட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை நேர்மையாக நடப்பதையும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதையும் அரசு உறுதி செய்திட வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் ஆபத்தான எல்லையை எட்டியதைப் பார்த்தோம். இப்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்து ஓராண்டுக்கு பிறகும், காவல்துறையில் சில மோசமான போக்குகள் தொடர்கின்றன. எனவே, காவல்துறையை சீர்திருத்தும் விதத்திலான முயற்சிகளை அரசு திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும். அனைத்து மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாக்கும் விதத்திலும். மனித உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தும் காவல்துறையினர் செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.