மாணவர்களே…தேர்வுகள் உங்களை மதிப்பிட அல்ல;நம்பிக்கையோடு எதிர்கொள்க – முதல்வர் வாழ்த்து!
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.அதைப்போல்,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.
இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதவுள்ள 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கூறியதாவது:
“நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள் நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல.நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க”,என்று தெரிவித்துள்ளார்.
நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல!
நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!
— M.K.Stalin (@mkstalin) May 4, 2022
இதனிடையே,நாளை தொடங்கவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.முன்னதாக மாணவர்கள் காலை 8 மணிக்கே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வுக்கு 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும்,,10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக,10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.