மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதை.. விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்? – ராமதாஸ்
மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும். மது அருந்துவதும் போதையில் வன்முறையில் ஈடுபடுவதும் தான் சாகசம் என்ற தவறான எண்ணம் மாணவர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தாக்க முனைதல், பொது இடங்களில் மோதலில் ஈடுபடுதல், மது அருந்தி வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட மாணவர்களின் செயல்பாடுகள் சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
மாணவர்கள் தவறான வழியில் செல்வதற்கு சமூக சூழலும் சமூகநல நோக்கமற்ற திரைப்படங்களுமே காரணம். மாணவர்கள் குடிப்பதையும் அதற்கு அடிமையாவதையும் சாத்தியமாக்குவது ஆங்காங்கே உள்ள மதுக்கடைகள் தான். மதுக்கடைகளை மூடாமல் மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல் தடுப்பது சாத்தியமற்ற செயல். மாணவர்களை நல்வழிப்படுத்த கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு போன்றவற்றில் கவனத்தை திருப்ப அரசு திட்டம் தீட்ட வேண்டும். மது, புகை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களுக்கு மத்தியில் வாழும் மாணவர்களிடம் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரை செய்யும் போது அதனால் எந்த பயனும் ஏற்படாது, அரசு எதிர்பார்க்கும் பயனை இது தராது.
அதேபோல், பள்ளி வளாகங்களுக்கு மிக அருகில் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் நேரடியாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மறைமுகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. போதைப்பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல் விழிப்புணர்வு ஊட்டும் அரசின் நோக்கம் போற்றத்தக்கது என்று தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,மதுக்கடைகளை மூடி மாணவ சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.