ஆரோக்கியமான வாழைப்பழ, கோதுமை மாவு போண்டா செய்வது எப்படி?
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு போண்டா ஆரோக்கியமாக வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இனிப்பு போண்டா என்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதனை வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து எளிமையாக மற்றும் ஆரோக்கியமாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – இரண்டு, ஏலக்காய் – மூன்று, சர்க்கரை – 1/2 கப், பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், கோதுமை மாவு – 1 கப், ரவை – 1/4 கப், துருவிய தேங்காய் – 1 கைப்பிடி.
செய்முறை: நன்கு பழுத்த இரண்டு வாழை பழத்தை எடுத்து கொள்ளுங்கள். மிக்சி ஜாரில் சர்க்கரையை சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஜாரில் வாழைப்பழத்தை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். வாழைப்பழத்துடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும். இதனுடன் ஏலக்காய், பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். இதில் உப்பு கொஞ்சம் சேர்க்க வேண்டும். இதனுடன் ரவை சேர்க்க வேண்டும். பின்னர் கோதுமை மாவு சேர்க்க வேண்டும்.
பின்னர் அனைத்தையும் போண்டா பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளுங்கள். இதனை அப்படியே 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர் இதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், அதில் தயார் செய்து வைத்துள்ள மாவை எடுத்து போண்டா வடிவத்தில் உருட்டி எண்ணெயில் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் பொன்னிறம் வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான இனிப்பான போண்டா ரெடி.