மாணவர்களே தயார்.. தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் பொதுத்தேர்வு!
10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1 முதல் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்ததை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. அதன்படி 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெற்றது.
இதனிடையே, எவ்வித புகாருக்கும் இடம் தராமல் 10,11 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வு அலுவலர்கள், ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா அறிவுறுத்தி இருந்தார். மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மறுபக்கம், தேர்வு மையங்களை அமைக்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மே 5ல் தொடங்கவுள்ள, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாநில முழுவதும் 26.76 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வானது வருகிற 5ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 30ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.