#BREAKING: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்.. காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் – பிரதமர் அறிவிப்பு
தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்.
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால், அப்போது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்று விமானம் மூலம் முதல்வர் முக ஸ்டாலின் தஞ்சை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்ல உள்ளார்.
இந்த நிலையில், தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Deeply pained by the mishap in Thanjavur, Tamil Nadu. My thoughts are with the bereaved families in this hour of grief. I hope those injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 27, 2022