#BREAKING: ஜெயலலிதா மரணம் – ஈபிஎஸ்-யிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு!
ஜெயலலிதா மரணம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையானது இடையில் முடங்கியிருந்த நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் இதுதொடர்பான விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், சமீபத்தில் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 156 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை தரப்பு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அளித்த மனு மீதான விசாரணை இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் நடைபெறுகிறது.
இந்த வழக்கில் வழக்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு செய்யப்பட உள்ளது. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாமா ? வேண்டாமா என்பதை ஆணையம் இன்று முடிவு செய்து அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 19-ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜராகியிருந்த நிலையில், மீண்டும் இன்று ஆஜராகியுள்ளார்.